|
தாரா அல்லது ஆர்ய தாரா வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவர்.இவர் சில சமயம பெண் புத்தராகவும் கருதப்படுகிறார். தாரா திபெத்திய தந்திர பௌத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் நமது நற்செயல்பாடுகளின் வெற்றியினால் கிடைக்கும் நன்மையின் அதிபதியாக கருதப்படுகிறார். ஒரு தந்திர தேவதையாக தாரா வஜ்ரயான பௌத்தத்தின் திபெத்திய பிரிவினரால் வணங்கப்படுகிறார். கருணை மற்றும் சூன்யத்தன்மையில் சில அந்தரங்க மற்றும் ரகசிய குணங்களை புரிந்து கொள்ள திபெத்திய பௌத்தர்கள் தாராவை வணங்குகின்றனர். ஜப்பானின் ஷிங்கோன் பௌத்தத்தில் இவர் தாரானி பொசாட்ஸு(போதிசத்துவர்) என அழைக்கப்படுகிறார்.
உண்மையில் தாரா தேவி என்பது பொதுவியல்புகளை உடைய பல போதிசத்துவர்களின் ஒரு பொதுப்பெயரே ஆகும். பௌத்தத்தில் போதிசத்துவர்கள் பல்வேறு நற்குணங்களின் உருவகங்களாகவே கருத்தப்பட்டுவருகின்றனர். அந்த வகையில், ஒரே குணத்தில் பல்வேறு இயல்புகளை இந்த பல்வேறு தாராக்கள் வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்ளலாம்.
|